Saturday, January 5, 2013

கண்ணனைக் காணவில்லை

இது மார்கழி மாதம் 
ஆண்டாளின் வேலை 
கண்ணனைத் தொழுவது 

புராணங்கள் சொன்னது 
இதிகாசம் சொன்னது 
இலக் கியம் சொன்னது 
கண்ணனை நம்பினோர் 
கைவிடப் படார் 

திரெளபதி மானம் 
கண்ணன் காத்தது!
குருஷேத்ர யுத்தம் 
கண்ணன் காத்தது!
நீதியும் நேர்மையும் 
கண்ணன் காத்தது!
அவன்தான் இந்திய 
மானம்  காத்தது!

எனவே 
கண்ணனை வணங்க 
அவன் திசை தேடினேன் 
எந்தத் திசையிலும் காணவில்லை 

பலப்பலப் பெயரில் 
அழைத்துப்பார்தேன் 
என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை 

எங்கே போனான்?
என்னதான்  ஆனான்?

திரெளபதி குரலுக்கு 
ஓடோடிவந்தான் 
அவள் மானம் காக்க 
ஆடைகள் தந்தான் 

இபோது கண்ணன் எங்கே காணோம் ?
தேடிப்பார்த்தேன் 
அழைத்துப்பார்தேன் 
கோயில் கோயிலாய் 
நுழைந்தும் பார்த்தேன் 



கண்ணனைக் காணோம்! 
கண்ணனைக் காணோம்! 
ஆண்டாள் வணங்கும் 
கண்ணனைக் காணோம்! 

கோபியரோடு ஆடியிருந்தானா ?
ஆண்டாளை மீராவைக் கூடியிருந்தானா?
புல்லாங்குழல் இசையில் தன்னை மறந்தானா?
வெண்ணைதின்ற களைப்பில் உறங்கி இருந்தானா?

டிசம்பர் 16 இரவு 8 மணிக்குப் பின் 
கண்ணனைக் காணவே இல்லை!
நிர்பயாவைக் காப்பாற்ற 
கண்ணன் வரவில்லை 
நிர்பயாவைக் காப்பாற்ற 
சேலை தரவில்லை 
நிர்பயா குரல் அவனுக்குக் 
கேட்கவே இல்லை 
மிருகங்களுக்கு எதிராகக் 
குருஷேத்ர யுத்தம் 
நடத்தவே இல்லை 

ஒருவேளை  கண்ணன் 
வார இறுதிக் கேளிக்கைக்குப் போயிருக்கலாம் 
டிஸ்கோ டான்ஸ் ஆடியிருக்கலாம் 

அவனைப் பார்த்தால் சொல்லுங்கள் எனக்கு 
அதுவரை எனக்குத் தோன்றுவது இதுதான் 

கவிதையெழுதுவது கையாலாகாத்தனமா?
கவிதையெழுதுவது வெட்டி வேலையா?
கவிதையெழுதுவது அரிப்பைச் சொறிந்து கொள்ளவா?

பேனாவைத் தூக்கிப்போட்டு 
ஆயுதம் ஏந்தினால்தான் 
கண்ணன் வருவானா?

இனி நான் எழுதுகோல் ஏந்தமாட்டேன் 
ஆயுதம் ஏந்துவேன்!
கண்ணன் வருவானா?

இது புதிய ஆண்டாளின் புதிய திருப்பாவை! 




No comments:

Post a Comment