கனவாக நிழலாடுகிறது
ரத்தமும் சதையுமாகக்
குழைந்த நேற்றுகள்
நனவாக நிழலாடுகிறது
யுத்தமும் சிதையுமாக
இணைந்த இன்றுகள்
காணவில்லை
என் மெல்லினம்
மீதமில்லை
என் பெண்வனம்
ஒவ்வொரு கோப்பை விஷம்
வாயில் திணிக்கப்படும்போதும்
உணர்கிறேன்
கவிதை கவசம்
மௌனம் ஆயுதம்
நெருப்பு என் இனம்
நான் வல்லினம்
* * *
இறப்புக்கும் கடினம் சந்திக்குச் சந்தி சிலைகளே வாழும்
பந்திக்குப் பாய்போல் சமாதிகள் நீளும்
சிந்திக்கும் சிரிக்கும் உழைத்திடச் சொல்லும்
உண்மையைப் பேசவும் அறிவுரை சொல்லும்
காக்கைக்கும் குருவிக்கும் கழிப்பறையாகும்
கலவரம் மூட்டும் போர்ப்பறையாகும்
சுண்ணாம்பு தேய்க்கவும் சிறுநீர் கழிக்கவும்
கைகால் உடைந்து ஓரிரு சிலைகள்
கைத்தடி கண்ணாடி இல்லாத சிலைகள்
தொண்டர்கள் அடிதடிச் சண்டைகளாலே
தலையே இல்லாமல் தலைவரின் சிலைகள்
வாழ்பவர்க்கெல்லாம் இல்லாத இடத்தில்
கொலுவரிசையிலே சிலைகள் எதற்கு?
ஏழைக்கு வசிப்பிடம் இல்லாத நாட்டில்
நீளமாய் நீளமாய்ச் சமாதிகள் எதற்கு?
அருங்காட்சி அகம்போல் சிலைக்காட்சியகத்தை
ஓரிடத்தினிலே உருவாக்கி விடலாம்
பெருங்கட்சி சிறுகட்சித் தலைவரின் சிலைகள்
அங்கே இருக்கும் அமைதியும் இருக்கும்
தலைவர்கள் போதிக்கும் சகிப்பையும் நட்பையும்
சிலையாக நின்றேனும் அவர்கள் கற்கட்டும்
சீண்டல்கள் சீறல்கள் சண்டைகள் முடியட்டும்
கலகங்கள் மோதல்கள் முழக்கங்கள் மடியட்டும்
பேசியே உலகினை ஆண்டவர்க்கெல்லாம்
மௌனத்தின் பெருமையைப் போதித்து வைப்போம்
* * *
தேவையாயிருக்கிறது வெற்றிடம்
எனேக்கே என
அரூபமாய் முளைக்கவும் கிளை க்கவும்
விழுது விடவும் வேர் விடவும்
தேவையாயிருக்கிறது வெற்றிடம்
குண்டூசி முனையாவது
திரிசங்கு மாதிரி
இடமில்லாத இடமாவது
நகர்ந்து கொண்டேயிருக்கிறேன்
என்னை விதைக்கும்
வெற்றிடம் தேடி
ஜென்மாந்திரக் கனவு சுமந்து
ஒற்றைக் கரையுடன்
பாயும் ஆறென..
* * *
உச்சியில் மட்டுமல்ல
அடிவாரத்திலும் தான்..
.
இடம் பொறுத்தல்ல தனிமை
மனம் பொறுத்தது ...
* * *
இருப்புக்கு மட்டுமல்ல
அடுக்கு மாடி.
கட்டாயப்படுத்தும்
அதிக சப்தமின்றி
அழவும் மாரடிக்கவும்
கற்றுத்தரும்
லாவகமாய்ப்
பாடைப் படுக்கையைக் கீழிறக்க
சமாளிக்க வைக்கும்
வாழ்க்கைத் திருப்பங்களைவிட
மாடிப்படித் திருப்பங்களை
பாதிப் பிணமானவர்கள்
தோள் கொடுப்பவர்கள்
கீழிறக்குவதற்குள்
இரண்டு வழியுண்டு
இந்தப் பிரச்னைக்கு
செய்யலாம்
செங்குத்துப் பாடைகள்
அல்லது
அடுக்குமாடிப் பிணங்களுக்கு
வேண்டுகோள் செய்யலாம்
இறக்க விருப்பவர்
இறக்கும் முன்பே
கீழிறங்கிச் சென்று
பாடையில்
படுக்க வேண்டும் என்பதாக
* * *
வாழ்க என் எதிரிகள் . . .
சிநேகமே தருகிறேன்
சிலுவையில் அறைபவர்களுக்கும்
உயிர்த் தெழுகிறேன்
மரிக்கும் போதெல்லாம்
என்னைப் புனிதமாக்குகிறார்கள்
அவர்கள் . . .
வாழ்க என் எதிரிகள்
உயிரோடு இருக்கிறேன்
எதிரிகளால் . . .
* * *