Thursday, March 17, 2011

தோகையெல்லாம் துப்பாக்கிகள்...

காலம் காலமாய்க்
காப்பியம் எல்லாம்
பெண்ணைச் சொன்னது ஒரே மொழி
காதல் மயக்கம்
கள்ளாய்க் கொட்டிக் 
கிறங்கச் செய்யும் போதை மொழி

வார்த்தை வீசி
வலையை வீசி
ஜாலம் செய்தது பெண்ணிடமே
சிந்தனை இல்லாச்
சதை மகள் என்றே
ஞாலம் சொன்னது நம்மிடமே



ஆண்டியில் தொடங்கி
அரசன் வரைக்கும்
பெண்ணில்லாமல் வாழ்வில்லை
இருந்தவர் இருப்பவர்
வருபவர்க்கெல்லாம்
பெண்ணின் உறவே வாழ்வெல்லை

பூமித்தாயின்
அவதாரம்தான்
பெண்ணின் பொறுமை என்பார்கள்
பூகம்பத்தின்
கோபம் கூடப்
பொறுமைப் பெண்ணின் வடிவம்தான்

மயிலின் அழகு
பெண்ணே என்பர்
தோகையெல்லாம் துப்பாக்கிகள்
குயிலின் பாட்டும்
பெண்ணே என்பர்
விடுதலை கூவும் அதிர்வேட்டுகள் 

No comments:

Post a Comment