Thursday, June 16, 2011

என் காதலன் . . . என் காதலி . . .

புனிதமானது என் கருவறை . . .
எந்தச் சாமியும் கொம்பனில்லை 
என் குழந்தைகளை விட. 
 
      ♬ ❤ ♡ ღ

துருவப் பிரதேசத்தில்
என் இருப்பு . . .
மகள் துருவம் 
மகன் துருவம்.

              ♬  ❤  ♡  ღ

மறந்துவிட்டது 
மனைவி அவதாரம் . . .
நினைவிருக்கிறது  
அம்மா அவதாரம் மட்டுமே.

              ♬  ❤  ♡  ღ


என் கிரீடம் 
அவர்கள் பூரிப்பு 
வானம் பூமி 
ஜெயிக்கிறேன் 
குழந்தைகளுக்காக . . .

               ♬  ❤  ♡  ღ

பேச வேண்டாம் 
மகன் அருகாமை போதும் 
நூற்றாண்டும்  கரையும்
மௌனத்தில்.

               ♬  ❤  ♡  ღ

முத்தம் தருகிறேன் 
மகள் பாதத்துக்கு 
மோட்சம் எனக்கு.

               ♬  ❤  ♡  ღ


தோளுக்கு மேல் வளர்ந்தவன் 
தோள் சாயும் போது 
நெகிழ்கிறேன்

ஆறடிக் குழந்தையைக் 
கர்ப்பம் சுமப்பதாக

               ♬  ❤  ♡  ღ

எங்கே போனாலும் 
மனசு ஒட்டுவதில்லை 
குழந்தைகள் தரும் நிம்மதி 
கிட்டுவதில்லை 

               ♬  ❤  ♡  ღ